Tamil Entrepreneurs

அம்பானி, அதானி, சுனில் மிட்டல்.. 5ஜி ஏலத்தில் மோதிப் பார்த்த மெகா நிறுவனங்கள்.. வெற்றி யாருக்கு?


அதிவேக அலைக்கற்றை எனக் கருதப்படும் 5ஜி அலைக் கற்றைக்கான ஏலம் கடந்த 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. இதில் அம்பானியின் ஜியோ, மிட்டலின் பார்தி ஏர்டெல், வோடஃபோன், பிர்லா குழுமத்தின் வோடஃபோன் ஐடியா ஆகியவற்றுடன் புதிதாக களம் இறங்கியிருக்கிறது. அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸின் அதானி டேட்டா. துறைமுகம், விமான நிலையம், மின்சாரம், நிலக்கரி என உள்கட்டமைப்புத் தொழில்களில் கோலோட்சி வரும் அதானி குழுமம் இந்த அலைக்கற்றை ஏலத்தில் முதல் முறையாக பங்கெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

முதல் நாளன்று ரூ.1.45 லட்சம் கோடிக்கும் இரண்டாம் நாள் அன்று ரூ.4,000 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது!

40% தள்ளுபடி விலையில்…

முதல் நாள் 700 மெஹா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ 1.45 லட்சம் கோடியாகும். இந்த ஏலத்தில் 600, 700, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெஹா ஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகா ஹெர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் முக்கியமான 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையின் அடிப்படை விலை (base price) அதிகமாக இருந்ததால், கடந்த இரண்டு ஏலங்களின்போது இது விற்கப்படவில்லை. இந்த முறை இதன் அடிப்படை விலையில் சுமார் 40% குறைக்கப்பட்டு, தள்ளுபடி விலையில் ஏலம் விடப்பட்டிருக்கிறது.

600, 800, 900 (ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் தவிர்த்து), 2,300 மெஹா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை வாங்க இந்த நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை. 1800 மெஹா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலத்தில் 7 சர்க்கிள்களும், 2100 மெஹா ஹெர்ட்ஸுக்கு 2 சர்க்கிள்களும், 2500 மெஹா ஹெர்ட்ஸுக்கு 1 சர்க்கிளும் கலந்துகொண்டன.

5ஜி

ரூ.4.3 லட்சம் கோடி மதிப்பு…

ஏலம் விடவிருக்கும் அலைக்கற்றையின் அளவு 72 கிகா ஹெர்ட்ஸ் இதன் மதிப்பு சுமார் ரூ.4.3 லட்சம் கோடி என கணிக்கப்பட்டு இருக்கிறது. அலைக்கற்றைக்கு இருக்கும் கிராக்கியைப் பொறுத்தும், ஏலத்தில் பங்கெடுப்பவர்களின் உத்திகளைப் (strategies) பொறுத்தும் ஏலம் விடுவதற்கான கால அளவில் மாற்றம் இருக்கும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட் ஏலத்துக்குமுன்பு செலுத்த வேண்டிய வைப்புத் தொகையாக (இ.எம்.டி) சுமார் ரூ14,000 கோடி கட்டியிருக்கிறது. பார்தி ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா ரூ.2,200 கோடியும் கட்டியிருக்கிறது.

அதானி கட்டியது ரூ.100 கோடி மட்டுமே…

ஆனால், அதானி குழுமம் கட்டியிருக்கும் தொகை சுமார் ரூ.100 கோடி மட்டுமே. இதை வைத்துப் பார்க்கும்போது, அதானி குழுமமானது அதனுடைய துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அதன் குழுமத்தின்கீழ் இருக்கும் பல அலுவலகங்களில் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படியான பிரத்யேக தனியார் நெட்வொர்க் ஒன்றை நிறுவி அதை நடத்துவதற்குத் தேவையான அலைவரிசையை மட்டுமே வாங்கும் என்றும், பொதுமக்கள் உபயோகத்துக்குத் தேவையான அலைவரிசைகளை வாங்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய சேவை

இந்த முன்செலுத்த வேண்டிய வைப்புத் தொகையானது எந்த அளவுக்கு ஒரு நிறுவனம் இந்தத் துறையில் தீவிரமாக இருக்கிறது என்பதற்கான ஓர் அளவுகோல் ஆகும். அதன்படி பார்த்தால், ஜியோவின் தீவிரம் தெரியவரும். இன்றைய நிலையில், தொலைத் தொடர்புத் துறையில் ஜியோவின் சந்தைப் பங்கு 35.7%, ஏர்டெல் 31.6%, வோடஃபோன் ஐடியா 22.6%, பி.எஸ்.என்.எல் 9.8%, எம்.டி.என்.எல் 0.3% ஆகும்.

வெளிநாடுகளுடன் போட்டி போட முடியும்…

இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டி ஒருபக்கம் இருக்கட்டும். இந்த அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நம் நாட்டில் இணையப்பரவல், பயன்படுத்தும் வேகம் அதிகரிப்பதுடன், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இருந்துவரும் 5ஜி அலைக்கற்றையின் தொழில்நுட்பத்துக்கு இணையாக வளர்வதற்கும் வழி பிறக்கும். தவிர, டிஜிட்டல் இந்தியா என்கிற திட்டத்தை இன்னும் பரவலாக எடுத்துச் செல்லவும் உதவும் என ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறியிருக்கிறார்.

சுனில் மிட்டல்

மேலும் அவர், `அதானியின் இந்த நுழைவானது இந்தத் துறையில் நன்கு வேரூன்றி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவை கொஞ்சம் அசைத்துப் பார்க்கச் செய்யும் என்பதோடு நிறுவனங்கள் செலுத்தியிருக்கும் முன்வைப்புத் தொகையின் அளவு வணிகரீதியில் 5ஜி அலைக்கற்றையில் இருக்கும் லாப சாத்தியக்கூறுகளை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுடன், வந்த வாய்ப்பை இழக்கத் தயாராக இல்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது’ எனக் கூறினார்.

20 தவணைகளில் பணம் செலுத்தலாம்!

இந்த ஏலமானது பணவீக்கத்தாலும், நிதிப் பற்றாக்குறையாலும் தத்தளித்துவரும் மத்திய அரசுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த ஏலம் விடக்கூடிய அலைவரிசைகளை உபயோகித்துக் கொள்வதற்கான கால அளவு 20 வருடங்கள் ஆகும். எனவே, இந்திய அரசும் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் ஏலத்தில் எடுத்த அலைவரிசைக்கானத் தொகையை சரிசமமாக 20 தவணைகளில் செலுத்தலாம் என்றும், முன்கூட்டியே பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் அறிவித்திருக்கிறது.

பணம்

5ஜி அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவதால், இப்போதிருக்கும் 7,23,000 டவர்களின் எண்ணிக்கை சுமார் 10,00,000-ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போதிருக்கும் டவர்களில் 34% டவர்கள் மட்டுமே ஃபைபர் பேக்ஹால் கொண்டது எனவும், மீதமிருப்பவை எல்லாம் மைக்ரேவேவ் எனவும் தெரியவந்திருக்கிறது. எனவே, அதிவேகத் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமெனில், அதற்கு ஃபைபர் அல்லது இ-பேண்ட்டில் இருக்கும் அலைக்கற்றைத் தேவையென துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வருமா 5ஜி…?

ஃபைபர் நெட்வொர்க் மிகவும் சிறப்பானது என்றாலும், இதை நிலத்துக்கு அடியில் நிறுவ வேண்டும் என்பதால், இந்த அதிநவீன தொழில்நுட்ப வசதி நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் என்பதுடன், அதிகம் செலவும் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, செலவு குறைவான இ-பேண்ட்–ஐ உபயோகிப்பது நல்லது என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் 1.1 மில்லியன் ரூட் கிலோ மிட்டரில் பைஃபர் நெட்வொர்க்கை நிறுவுவதற்கு அதிகமான முதலீட்டை செய்திருக்கிறார்கள்.

கம்ப்யூட்டர்

வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு செப்டம்பரில் இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வருகையால் பல நல்ல செயல்கள் ஏற்பட்டாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகள் நொடிப் பொழுதில் பல லட்சம் பேரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது. இந்த 5ஜி தொழில்நுட்பம் நம்மிடம் என்னென்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.Source link

Leave a Reply

Your email address will not be published.