Health

இறந்த பன்றிகளை உயிர் பிழைக்க வைத்த அதிசயம்.. ’OrganEx’.. மருத்துவ உலகில் புதிய புரட்சியா?

விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. செயலிழந்த உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்தி உயிர்வாழ செய்யமுடியும் என்ற நிலையைத் தாண்டி இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது இறந்துபோன பன்றிகளுக்கு மீண்டும் உயிர்வர வைத்திருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். மேலும் இதன்மூலம் எதிர்காலத்தில் இறப்பு என்பதற்கான வரையறையையே மாற்றியமைக்க முடியும் என்கின்றனர் அவர்கள்.

இறந்து ஒரு மணிநேரமான பன்றிகளின் ரத்த ஓட்டம் மற்றும் செல்களின் செயல்பாட்டை மீட்டெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கண்டுபிடிப்பு, மனிதர்களின் எதிர்கால மருத்துவ பயன்பாடுகள் மீதான நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகவும், மேலும் உறுப்புகளின் வாழ்நாளை அதிகரிக்கவும், உலகளவில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் காப்பாற்ற முடியுமெனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இது நடைமுறை நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக விவாதத்தையும் தூண்டலாம். குறிப்பாக இந்த சோதனையின் போது இறந்தகிடந்த சில பன்றிகள் திடீரென தலைகளை அசைத்து விஞ்ஞானிகளை திடுக்கிட வைத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க விஞ்ஞான குழு, துண்டிக்கப்பட்டு சிலமணி நேரங்களான பன்றிகளின் தலையிலுள்ள செல் இயக்கங்களை தூண்டி விஞ்ஞானிகளையே திடுக்கிட வைத்தனர். தற்போது நேச்சர் இதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வின் முடிவு முழு உடல் செல் இயக்கங்களை தூண்டுவதை விவரிக்கிறது.

image

இந்த செயல்முறையில் பன்றிகளை செயற்கையான முறையில் இறக்கவைத்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பின்னர் மீண்டும் உயிர்பித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதன்படி, முதலில் மயக்கமருந்து செலுத்தப்பட்ட பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டியதில் அவற்றின் உடலில் ரத்தஓட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் உடற் செல்களுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டதால் பன்றிகள் இறந்தன. இப்படி இறந்த பன்றிகள் அப்படியே ஒருமணிநேரம் வைக்கப்பட்டன. பின்னர் விஞ்ஞானிகள் பன்றிகளின் சொந்த இரத்தத்தை ஒரு திரவத்துடன் கலந்து அவற்றின் உடல்களில் பம்ப் செய்தனர். அதேபோல் ரத்த அணுக்களுக்கு ஆக்சிஜனை சுமந்துசெல்லும் புரதமான ஹீமோகுளோபினும் செயற்கை முறையில் செலுத்தப்பட்டது. மேலும் ரத்தம் கட்டியாகுதலை தடுத்து செல்களை பாதுகாக்கும் மருந்துகளும் செலுத்தப்பட்டது.

அதன்பின் ஆறுமணிநேர சோதனைக்குப்பிறகு உடலில் ரத்தம் ஓட்டம் துவங்கியதுடன், முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றின் பல செல்கள் செயல்படவும் ஆரம்பித்தன. ‘’இந்த செல்கள் சில மணிநேரங்களுக்குப் பிறகு செயல்படக்கூடாது. ஆனால் செல்கள் அழிவதை தடுத்து நிறுத்தலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது’’ என்கிறார் இந்த யேல் பல்கலைக்கழக ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நேனத் சேஸ்டன்.

image

யேலை சேர்ந்த மற்றொரு உடன் ஆராய்ச்சியாளராக டேவிட் ஆண்ட்ரிஜெவிக் இதுபற்றி கூறுகையில், OrganEx எனப்படும் நுட்பத்தின்மூலம் அழிவின் விளிம்பிலுள்ள உறுப்புகளை காப்பாற்ற முடியும் என எங்கள் குழு நம்புகிறது என்கிறார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டெர்ஸ் சாண்ட்பெர்க் இதுகுறித்து கூறுகையில், OrganEx என்ற இந்த தொழில்நுட்பம் அறுவை சிகிச்சைக்கான புதிய வழிகளை உருவாக்குவதுடன், சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கித் தரும் என்கிறார்.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த தொழில்நுட்பத்தின்மூலம் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்க முடியும். இருப்பினும் இது நோயாளிகளை life support உதவி இல்லாமல் வாழ முடியாத நிலைக்குத் திரும்பக் கொண்டுசெல்லலாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் ப்ரெண்டன் பாரெண்ட்.

ஆராய்ச்சியாளர் சாம் பார்னியா கூறுகையில், “உண்மையில் குறிப்பிடத்தக்க மற்றும் நம்பமுடியாத ஆய்வு; மேலும் மரணம் என்பது ஒரு கருப்பு – வெள்ளை நிகழ்வல்ல; அது ஒரு உயிரியல் செயல்முறை. மரணம் நிகழ்ந்தபிறகும் பல மணிநேரங்களுக்குப் பிறகு சிகிச்சையின்மூலம் உயிரை மீட்டெடுக்க முடியும் என்பதையும் இந்த ஆய்வு காட்டிவிட்டது’’ என்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Leave a Reply

Your email address will not be published.