Tamil Entrepreneurs

உயரம் அதிகரிக்க சிகிச்சை: ரிஸ்க் எடுத்து ஆர்வம் காட்டும் கூகுள், அமேசான் ஊழியர்கள்- ஏன் தெரியுமா?


உடலின் உயரம் சரியாக இல்லை எனப் பலர் வருத்தப்பட்டுக் கேட்டிருப்போம். வளர்ந்த பிறகு உயரத்தை எல்லாம் மாற்ற முடியாது. அதற்குச் சிறுவயதில் இருந்தே காலை எழுந்த உடன் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நேரம் சுவற்றில் தொங்க வேண்டும். சிறுவயதில் உயரமாகவில்லை என்றால், பின்னாளில் முடியாது எனப் பலர் பலவிதமாக சொல்லிக் கேட்டு இருப்போம்.

ஆனால் அதெல்லாம் இல்லை. நீங்கள் வயதான பிறகும் உங்களின் உயரத்தை அதிகரிக்கலாம் என்கிறார், லாஸ் வேகாஸில் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர் கெவின் டெபிபர்ஷாத் (Kevin Debiparshad).

அதோடு தன்னிடம் உயரத்தை அதிகரிக்கச் சொல்லி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களாக இருக்கின்றனர். அதிலும் கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற நிறுவன ஊழியர்கள் தான் அதிகம் வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கெவின், LimbplastX என்ற கிளினிக் ஒன்றைத் தொடங்கி, அங்கே கால் உயரத்தை அதிகரிக்கும் (leg – lengthening procedure) செயல்முறை சிகிச்சையைச் செய்கிறார்.

அதாவது காலின் உயரத்தை அதிகரிக்க எலும்பின் உள்ளே, டைட்டேனியம் பின்களை பொருத்துகிறார். முதலில் அந்த பின்களை உள்ளே செருகத் தொடை எலும்பு முறிக்கப்படுகிறது. நோயாளி கேட்ட உயரம் அடையும் வரை, காந்த அமைப்பைக் கொண்டு ஒவ்வொரு நாளும் சிறு அளவுகளில் அந்த பின்கள் நீட்டித்து விடப்படுகின்றன. வலிமிகுந்த இந்தச் சிகிச்சை ஒரு இன்ச் அல்லது மூன்றரை இன்ச் துளைகள் (incision) ஏற்படுத்திச் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு நபரின் உயரத்தை மூன்று இன்ச் வரை அதிகரிக்கலாம். தொடை எலும்பின் உயரத்தை (femur lengthening) அதிகரிக்க இவ்வாறு செய்கிறார்கள்.

surgery

ஆறு இன்ச் வரை உயரம் வேண்டும் என்பவர்களுக்கு, மேலும் இரண்டு துளைகள் ஏற்படுத்தி டிபியல் எலும்பின் (Tibial lengthening) உயரத்தை அதிகரிக்கிறார்கள். இந்தச் செயல்முறையைச் செய்து முடிக்க சுமார் ஓர் ஆண்டு வரை எடுக்கிறது.

இந்தச் சிகிச்சையைச் செய்ய 70,000 முதல் 1,50,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். அதுவும் அந்த நபர் எந்த அளவிற்கு தன்னுடைய உயரத்தை அதிகப்படுத்தச் சொல்கிறார் என்பதைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும். சிகிச்சை முடிந்தபின் பொருத்தப்பட்ட பின்களை அகற்ற, கூடுதலாக 14,000 முதல் 20,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும்.

சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்களிலேயே தங்களின் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பலாம் எனச் சொல்கின்றனர். குறிப்பாக டெக் நிறுவனங்களில் இருந்து அதிகம் பேர் இங்கு வருவதாகவும், வேபாஸில் இருந்து இதுவரை 20 சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் இந்தச் சிகிச்சையைச் செய்துள்ளனர் எனவும் கூறுகிறார். கூகுள், அமேசான், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து அதிகம் பேர் இந்தச் சிகிச்சைக்காக வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கன் டாலர்

வலிமிகுந்த இந்தச் சிகிச்சையை ஏன் இவர்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டும். சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்களும், அழகு குறித்த பிம்பமும் உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஊர் பார்க்க தன் உடலை வருத்திக் கொள்ளும் சிகிச்சைகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.



Source link

Leave a Reply

Your email address will not be published.