Delhi
oi-Yogeshwaran Moorthi
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 4 கோடி மக்கள், இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர், தாமான முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இதன் பலனாக அண்மையில் இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லோக் சபாவில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்துள்ளார். அதில், இதுவரை 97.34 சதவிகிதம் மக்களுக்கு இலவசமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் இந்திய மக்களில் 98 சதவிகிதம் பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 90 சதவிகிதம் பேர் இரண்டு தவணை கொரோனா வைரஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும், கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உள்ள 4 கோடி மக்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English summary
4 crore eligible People have not taken even a single dose of COVID-19 vaccine as on July 18, Minister of State for Health Bharati Pravin Pawar informed the Lok Sabha.
Story first published: Saturday, July 23, 2022, 12:57 [IST]