Tamil Entrepreneurs

சேதாரம்… ஆதாரம்..? நீங்கள் வாங்குவதெல்லாம் ஒரிஜினல் தங்கம்தானா? ‘916’ உண்மைகள்!


‘‘ஒரு பவுன் தங்கத்தில், 1.5 கிராம் செம்பு சேர்க்கப்படுகிறது. ஆனால், அந்த செம்புக்கும் தங்கத்தின் விலை வைத்து மக்கள் தலையில் கட்டுகிறார்கள்…’’ – இப்படியொரு வாட்ஸ்அப் தகவல், கடந்த மூன்றாண்டுகளாக திரும்பத் திரும்ப ஃபார்வர்ட் ஆகி, அனைவரை யும் அதிர வைத்துக்கொண்டிருக்கிறது.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் தனது செல்போன் நம்பருடன் அனுப்பிய வாட்ஸ் அப் பதிவுதான் அது. அந்த வாட்ஸ்அப்பில் அவர் சொல்லியிருக்கிற விஷயங்களைப் பார்ப்போம்.

‘‘தங்கம் வாங்கும்போது தங்கம் 6.5 கிராம் + செம்பு 1.5 கிராம் என இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்க நகையாகக் கணக்கிட்டு வசூலித்து விடுகிறார்கள். அத்துடன் சேதாரம் 1.5 கிராம் என்று சொல்லி, அதற்கும் தங்கத்தின் விலை வசூலிக்கிறார்கள். ஆக, வாங்குவது ஒரு பவுன் தங்கம். ஆனால், 9.5 கிராமுக்கான பணத்தைக் கொடுக்கிறோம். ஆனால், அந்த நகையில் இருக்கும் தங்கம் 6.5 கிராம் மட்டுமே!

தங்கம்

இதன்படி பார்த்தால்…

6.5 கிராம் தங்கம் ரூ.30,940, 1.5 கிராம் செம்பு – ரூ.7.20. ஆக, 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்கவிலை- 30940+7.20 = 30947.20.

1 பவுன் தங்கத்தின் விலை ரூ.38,080. அடக்க விலையான – 30,940 ரூபாயைக் கழித்தால், லாபம் = ரூ.7,140.

சேதாரம் 1.5 கிராம் = ரூ.7140

ஆகக்கூடி, 1 பவுனுக்கு நகைக்கடைகள் பார்க்கும் மொத்த லாபம் ரூ.14,280.

யாரை ஏமாற்றுகிறார்கள் நகைக் கடைக் காரர்கள்..?’’ என்று கேள்வி எழுப்புகிறது அந்த வாட்ஸ்அப் (இந்தப் பதிவு வெளியிடப்பட்ட காலத்தில் இருந்த விலை அடிப்படையில்தான் இந்தக் கணக்கு அமைந்திருக்கிறது).

பொதுவாகவே, தங்க நகை விஷயத்தில் செய்கூலி, சேதாரம் என்பது பல காலமாகவே பேசுபொருளாகத்தான் இருக்கிறது. 8 கிராம் உள்ள ஒரு பவுன் நகைக்கு 3% முதல் 25% வரை நகைக்கடைகளில் சேதாரம் வசூலிக் கப்படுகின்றன. இத்தகைய சூழலில், திரும்பத் திரும்ப ஃபார்வர்ட் ஆகும் இந்த வாட்ஸ்அப் தகவல், பலரையும் யோசிக்க வைக்கிறது. இதைத் தொடர்ந்து, தங்க நகைகளை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய செய்கூலி, சேதாரம், எடை, தரம் குறித்து பலவித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சரியான பதில் என்ன என்று தேடினோம். நாங்கள் கண்டறிந்த விஷயங்கள் இதோ உங்களுக்கு…

நகைகளின் எடை கடைக்குக் கடை மாறுவது ஏன்?

தங்க நகைகள் மீதான சேதாரம் என்பது கடைக்குக் கடை ஏன் மாறுபடுகிறது, சேதாரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது… என்கிற கேள்விகளை சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் இனி…

“ஓர் ஓவியத்தைக் கையால் வரைவதற்கும், டிஜிட்டலில் வரை வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அதே போலத்தான், கையால் உருவாக்கப்படும் நகைக்கும், மெஷினில் உருவாக்கும் நகைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நகையைச் செய்யும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது கணிசமான அளவு தங்கம் சேதாரம் ஆகிறது. எனவேதான், சேதாரம் ஒவ்வொரு நகைக்கும், ஒவ்வொரு கடைக்கும் வித்தியாசப்படு கிறது. நகையை உருவாக்கு வதற்கான செலவு, நகைக் கடைகளின் இதர செலவு களான ஊழியர்களின் ஊதியம், மார்க்கெட்டிங், மக்களுக்கு வழங்கும் இதர சேவைகள் என ஒரு நகையை உற்பத்தி செய்வதில் ஆரம்பித்து, விற்பனை செய்யும் வரை உள்ள செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கித்தான் சேதார மாக நிர்ணயிக்கப்படுகிறது” என்று பதில் தந்தார் சலானி.

தங்கம்

தவறான தகவல்…

முசிறி வழக்கறிஞரின் வாட்ஸ்அப் தகவல் முன்வைக்கும் கேள்விகள் குறித்து ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம். அவர் சொன்ன தாவது…

‘‘22 காரட் தரம் கொண்ட ஒரு பவுன் தங்க நகையில் கலக்கப்படும் செம்பின் அளவு 1.5 கிராம் என்பது தவறான தகவல். 0.672 மில்லி கிராம் மட்டுமே கலக்கப்படு கிறது. இதற்கு அதிகமாகக் கலக்கப்பட்டிருந்தால், அந்த நகையை 22 காரட் தரத்தில் மதிப்பிட மாட்டார்கள்.

ஒரு பவுன் தங்க நகையில் 7.328 கிராம் 24 காரட் சொக்கத் தங்கமும், 0.672 மில்லி கிராம் செம்பும் இருக்கும். இவ்வாறு கலந்து உருவாக்கப்படும் நகைதான் 22 காரட் தங்க நகை. இன்றைய தேதியில் இதன் விலை ஒரு கிராம் ரூ.4,695 (7.9.22 நிலவரப்படி).

இதில் சொக்கத் தங்கம் தனியாகவும் செம்பு தனியாக வும் பிரித்து விலையைக் கணக்கிட முடியாது.

வாட்ஸ்அப்பில் உலவும் அந்தத் தகவலில் சொக்கத் தங்கத்தின் விலை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை. அதாவது, 22 காரட் உள்ள 1 கிராம் தங்க நகையின் விலை ரூ.4,695. ஒரு பவுன் (8 கிராம்) ரூ.37,560. இதுவே, 24 காரட் சொக்கத் தங்கம் ஒரு கிராமுக்கான விலை ரூ.5,097. இதன்படி பார்த்தால், 22 காரட்டில் இருக்கும் 7.328 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.37,350 (8 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.40,776).

தங்கத்தின் விலையில் நகைக்கடைக்காரர்கள் எந்த தவறும் செய்ய முடியாது. அவர்கள் சேதாரத்தைத்தான் லாபத்தைப் பார்க்கும் வகை யில் கணக்கிடுகிறார்கள். சொக்கத் தங்கத்துடன் செம்பு / வெள்ளி போன்ற உலோகங் களைச் சேர்த்துதான் நகை களாக உருவாக்க முடியும்.

எந்தப் பொருளை உருவாக்கினாலும் அதில் சேதாரம் இருக்கும். அந்த அடிப்படையில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கம்தான், மதிப்புக் கூட்டப்பட்டு நகை களாக மாற்றப்படுகின்றன. உருக்குவது, கட்டிங் செய்வது, இழைப்பது, பிரஸ்ஸிங், பஃபிங் போன்ற செயல்பாடு களின்போது தங்கம் சேதம் அடைகிறது.

இதனுடன் தங்களின் செலவுகள் மற்றும் லாபம் ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாக சேதாரம் என்கிற வகையில் கணக்கிட்டு, வாடிக்கையாளர்களிடம் வாங்குகிறார்கள்.

இந்தச் சேதாரம் கடைக்குக் கடை, நகைக்கு நகை வித்தியாசப்பட இன்னொரு காரணம், நகையில் உள்ள வேலைப்பாடுகள் தான். எடை அதிகமாக இருந்து வேலைப் பாடு குறைவாக இருந்தால், சேதாரம் குறைவாக இருக்கும். எடை குறைவாக இருந்து வேலைப்பாடுகள் அதிகமாக இருந்தால், சேதாரம் அதிகமாகும். முன்பெல் லாம் செய்கூலி தனியாகவும் சேதாரம் தனியாகவும் கணக்கிடப் பட்டன. தற்போது, செய்கூலி தனியாகக் கணக்கிடப்படுவதில்லை. இது பல குழப்பங்களை உருவாக்குவதால், செய்கூலி அதாவது, தயாரிப்புக் கட்டணம் (making charges) என்பது தனியாக விரைவில் நிர்ணயிக்கப்பட உள்ளது.

இப்போது மெஷின்கள் மூலமாகவும் நகைகள் தயாரிக்கப்படு கின்றன. மெஷின் மூலம் உருவாக்கப்படும் நகைகளில் எப்படி சேதாரம் வரும் என்று சிலர் கேட்கிறார்கள். மெஷினில் உருவாக்கப்படும் தங்க நகைகளிலும் சேதாரம் இருக்கும். அது மட்டுமல்ல, மெஷின்கள் வந்தபிறகும், பெரும்பான்மையான நகைகள் கைகளால்தான் உருவாக்கப்படுகின்றன. அதைத்தான் மக்களும் அதிகம் விரும்புகிறார்கள்.

எடையும் தரமும்…

முன்பெல்லாம் தங்க நகைகளின் தரம், எடை ஆகியவை ஓர் ஒழுங்குமுறைக்குள் வராமல் இருந்தன. தரம் குறைவான நகைகள் மக்களுக்கு விற்கப்பட்டன. ஆனால், தங்கநகை விற்பனை ஒழுங்குபடுத்தப்பட்டு ஹால்மார்க் முத்திரை போன்ற நடைமுறைகள் வந்தபிறகு, பெரும்பாலான நகைக் கடைகளில் அதன் தரம் முத்திரை இடப்பட்டே விற்கப் படுகிறது. தங்கம், செம்பு / வெள்ளி போன்றவற்றுடன் கலந்து நகைகளாக உருவாக்கப்படும்போது, அதில் தங்கத்தின் தூய்மை எவ்வளவு இருக்கிறது என்னும் அடிப்படையில் காரட் தீர்மானிக்கப்படுகிறது.

பொதுவாக, 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் என தங்கம் அதன் தூய்மை அளவுக்கேற்ப விற்கப்படுகிறது. 24 காரட் தங்கத்தில் முழுமையாக 24 பங்கு தங்கம் இருக்கும். 22 காரட் தங்கத்தில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு பிற உலோகமும் கலந்திருக்கும். பெரும்பாலும், தங்கநகை ஆபரணங்கள் 22 காரட் தங்கமாக இருக்கும். அதாவது, சதவிகிதத்தில் 91.67 சதவிகிதம் தங்கமும், 8.33 சதவிகிதம் பிற உலோகமும் இருக்கும். எனவேதான், இது 916 தங்கம் எனக் கூறப்படுகிறது. 18 காரட் தங்கத்தில் 18 பங்கு தங்கமும் 6 பங்கு பிற உலோகமும் கலந்திருக்கும். காரட் அளவுக்கேற்ப அவற்றின் விலையும் இருக்கும்.

தங்க நகைகளை வாங்கும் போது அதில் பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards – BIS) ஹால்மார்க் முத்திரை, எத்தனை காரட் என்ற முத்திரை, 916, கேடிஎம் முத்திரை, விற்பனை செய்யும் கடையின் முத்திரை ஆகிய முத்திரைகள் இருக்கும்.

இந்த முத்திரைகள் இல்லாத நகைகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எடையைப் பொறுத்தவரை, நகையில் உள்ள டேகில் குறிப்பிடப் பட்டிருக்கும் அதே எடைதான் இருக்கிறதா என்பதை எடை மெஷினில் வைத்துக் காட்டும் போது தவறாமல் ஒவ்வொரு வரும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ரசீதிலும் அது சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

24 காரட் தூய தங்கமானது அடர்பொன் நிறத்தில் இருக்கும். அதனுடன் கலக்கும் உலோகம் மற்றும் அளவைப் பொறுத்து தங்க நகைகளின் நிறம் மாறும்.

வடஇந்தியாவில் தங்கத் துடன் அதிகமாக வெள்ளி கலந்து நகைகளைச் செய் வார்கள். அது மிக இலகுவாக இருக்கும். நிறமும் கொஞ்சம் வெள்ளை கலந்ததாக இருக்கும். தென் இந்தியாவில் பெரும் பான்மையாக செம்பு கலந்து தயாரிக்கப்படுகின்றன. இவை வலுவாகவும், நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும்’’ என்று சொல்லி முடித்தார் சுவாமிநாதன்.

லாபகரமாகக் கையாள்வது எப்படி?

பொதுவாக, தங்கம் வாங்கும்போது சேதாரம், ஜி.எஸ்.டி போன்றவற்றால் கணிசமான தொகையை இழக்கிறோம். விற்பனை செய்யும்போது கணிசமான அளவு கழிவு செய்யப்படுகிறது. அப்போதும் இழப்புதான். இதையெல்லாம் யோசிக்கும் போது, தங்கத்தை எப்படி லாபகரமாக நிர்வகிப்பது, தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்கிற கேள்விகள் இயல்பாகவே எழத்தான் செய்கின்றன. அவற்றுக்குப் பதில் சொன்னார் சென்னை யைச் சேர்ந்த நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

“மக்கள் ஆர்வமுடன் தங்கம் வாங்கக் காரணம், ஆபரணங்கள் மீதுள்ள ஆசை. அடுத்தது, நெருக்கடி காலங்களில் பணமாக்கக்கூடிய எளிமையான ஒரு சொத்து. அதனால்தான் அதிகமான தொகையை தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் மக்கள் செலவு செய்கிறார்கள். ரியல் எஸ்டேட் சொத்துகளை அவசரத்துக்குப் பணமாக்க முடியாது. எனவேதான், தங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றபடி தங்கத்தை வைத்து தொழில் செய்பவர்கள் தவிர, சாதாரண மக்கள் முதலீட்டுக்காகத் தங்கத்தை வாங்குவதில்லை. காரணம், தங்கத்தில் நாம் போட்ட பணம் நமக்கு லாபத்தைத் தந்திருக்கிறதா என்றெல்லாம் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை.

தங்கத்தை வாங்கும்போதும், விற்கும்போதும் குறிப்பிட்ட தொகையை இழக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.

தங்கம் என்பது நமக்கு நெருக்கடி காலங்களில் உதவினாலும், பொதுவாகப் பார்த்தால் பணவீக்கத்தைத் தாண்டி எந்த வருமானத்தையும் அது தருவதில்லை. ஆண்டுக்கு 5 முதல் 6% அளவுக்குத்தான் வருமானம் கொடுக்கிறது. கிட்டத்தட்ட பணவீக்கமும் இந்த நிலையில் இருப்பதால், அதற்கு நிகரான ரிட்டர்ன்தான் கிடைக்கிறது.

தங்கத்தைப் பொறுத்தவரை, ஆபரணங்களாக வாங்கும்போது தேவையான அளவுக்கு மட்டுமே வாங்குவது நல்லது. ஆசைக்காக நகைகளை வாங்கியவர்கள் பெரும்பாலும் அதை லாக்கரில்தான் வைத்திருக்கிறார்கள்.

நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நகைகளில் உள்ள கற்களும் தங்கத்தின் மதிப்பில்தான் கணக்கிடப்படும். தங்கத்தின் மதிப்பு குறித்து கவலைப்படுபவர்கள், ஆபத்துக் காலத்தில் பணமாக்க நினைப்பவர்கள் கல் நகைகளைத் தவிர்க்கலாம்.

பழைய தங்க நகைளை விற்கும்போதோ அல்லது அவற்றை மாற்றி புதிய நகை வாங்கும் போதோ நகைக்கடைகள், அடகுக் கடைகள் கணிசமான கழிவைக் கட்டாயம் செய்கின்றன. முடிந்தவரை நகை வாங்கிய ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் நகைகளை விற்கப் போகும்போது அந்த ரசீதைப் பார்த்தால், ஏற்கெனவே சேதாரம், ஜி.எஸ்.டி ஆகியவற்றால் எவ்வளவு தொகை இழந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். வாங்கும்போது இருந்த விலைக்கும் இப்போது உள்ள விலைக்கும் வித்தியாசம் பாருங்கள். வாங்கும்போது இழந்த தொகை, விற்கும்போது கழிவு என்கிற பெயரில் இழந்த தொகை ஆகியவை போக, லாபம் வந்திருக்கிறதா என்று பார்த்து விற்கலாம். முடிந்தவரை, நகை வாங்கிய கடையிலேயே அந்த நகைகளை விற்கவும், மாற்றவும் பாருங்கள். வேறு கடை நகைகளெனில், அதிகமான கழிவைக் கணக்கிட வாய்ப்புள்ளது’’ என்றார் லலிதா ஜெயபாலன்.

இனி தங்க நகை வாங்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து வாங்குங்கள்!

நகைச் சீட்டு… கட்டாயம் கவனிக்க வேண்டியவை…!

‘‘நகைச்சீட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது முறைப் படுத்தப்படாத ஒரு திட்டம். 12 மாதங்களுக்கு நிதி திரட்டினால் மட்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் அந்தத் திட்டம் வரும். இதிலிருந்து விலகுவதற்காகவே நகைக்கடைகள் 11 மாத நகைச் சீட்டுத் திட்டங்களை நடத்திவருகின்றன. சில நகைக் கடைகள் நகைச் சீட்டு திட்டங்களைத் திரட்டியபின் திவால் ஆனதால், பணம் போட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். நகைச்சீட்டு போடும்முன் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனியுங்கள்.

நகைச்சீட்டில் மக்கள் ஆர்வமுடன் சேரக் காரணம், செய்கூலி, சேதாரம் இல்லை என்பதுதான். ஆனால், நகைச்சீட்டுத் திட்டத்தின் மூலம் சேர்பவர்கள் குறிப்பிட்ட நகைகளைத்தான் எடுக்க முடியும்; குறிப்பிட்ட அளவுக்குத்தான் சேதாரத்துக்கு விலக்கு தரப்படும் என்பது போன்ற பல நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட கடைகள் வைப்பதுண்டு. எனவே, முன்கூட்டியே திட்டத்தின் நிபந்தனைகளைத் தெளிவாகக் கேட்டுக்கொண்டு திட்டத்தில் சேருங்கள். நகைச்சீட்டு திட்டத்தைத் தொடர முடியாமல் போனால், அதுவரை கட்டிய தொகையை எப்படி வாங்குவது, நகைச்சீட்டில் செலுத்திய தொகையின் மதிப்புக்கு மட்டும்தான் சேதாரம், செய்கூலி விலக்கு இருக்குமா நகையை எடுக்கும்போது கூடுதலாகச் செலுத்தும் தொகைக்கு செய்கூலி, சேதாரம் கணக்கிடப்படுமா என்பது போன்ற விவரங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.’’

தங்கப் பத்திரம்… பணம் பத்திரம்!

‘‘முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் அரசாங்கம் வெளியிடும் தங்கப் பத்திரங்கள், கோல்டு இ.டி.எஃப், கோல்டு ஃபண்டுகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். எப்படி நகைச்சீட்டில் மாதந்தோறும் கட்டுகிறீர்களோ, அதே போலவே கோல்டி இ.டி.எஃப், கோல்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரலாம். பணம் எப்போது தேவைப்படுகிறதோ, திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.

அரசின் தங்கப்பத்திரங்களைப் பொறுத்தவரை, தங்கத்தின் விலை ஏற்றத்தால் கிடைக்கும் பலனையும் தருவதுடன், ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்கப்படுகிறது. சேதாரம், ஜி.எஸ்.டி போன்ற கூடுதல் செலவினங்களும் இருக்காது. தங்கமாக வாங்கும்போது இந்த வட்டி கிடைக்காது. 8 வருட லாக்இன் காலம் முடிந்த பிறகு, இதை விற்றுக்கொள்ள முடியும். இதற்கு எந்தவித மூலதன ஆதாய வரியும் இல்லை.

இதில் உள்ள ஒரே அசெளகர்யமான விஷயம், இதில் மொத்த முதலீடாகத்தான் மேற்கொள்ள முடியும். அரசு, தங்கப் பத்திரங்களை எப்போது வெளியிடும் என்பது தெரியாது. சில நாள்களுக்கு மட்டுமே இந்த விற்பனை இருக்கும். 5 – 8 ஆண்டுகள் கழித்து இந்தப் பத்திரங்களை விற்பனை செய்தால், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டிவரும்.

தங்கப் பத்திரத்தை யாரும் திருட முடியாது. அப்படியே திருடினாலும் அவர்களால் அதைப் பணமாக்க முடியாது (என்.ஆர்.ஐ-கள் தங்கப் பத்திரங்களை வாங்க முடியாது). தங்க பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து கடனும் பெறலாம்.’’

பணவீக்கம் அதிகமானால், விலை கூடும்!

‘‘பணவீக்கத்துக்கும் தங்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. எப்போதெல்லாம் பணவீக்கம் அதிகமாக இருக்கிறதோ, அப்போது தங்கத்தின் மதிப்பு கூடும். பணவீக்கம் அதிகமாகும்போது தங்கத்தை விற்க நினைப்பவர்கள் விற்கலாம். ஆனால், அமெரிக்க டாலருக்கும், தங்கத்துக்கும் இடையே எதிர்மாறான தொடர்பு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு கூடும்போது தங்கத்தின் மதிப்பு குறையும். டாலரின் மதிப்பு குறையும்போது தங்கத்தின் மதிப்பு கூடும். கடந்த ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் விலை ரூபாய் மதிப்பில் 8% உயர்ந்தது. ஆனால், டாலர் மதிப்பில் 2% குறைந்தது. இதற்குக் காரணம், இந்தக் காலத்தில் ரூபாயின் மதிப்பு குறைந்ததுதான்.’’

தங்கக்கட்டி & நாணயம்…!

‘‘தங்கத்தின் மதிப்புக்காக அதை ஒரு முதலீடாகவும் பார்ப்பவர்கள். தங்க நகைகளாக வாங்காமல் தங்கக் கட்டிகளாகவும், நாணயங்களாகவும் வாங்கலாம். இவற்றுக்குப் பெரிய அளவில் சேதாரம் இருக்காது. பிற்காலத்தில் விற்கப்போகும்போது எந்தக் கழிவும் இல்லாமல் அன்றைய தினத்தில் உள்ள தங்கம் விலைக்கே எடுத்துக்கொள்வார்கள். அதே சமயம், தங்கத்தில் செய்யும் முதலீட்டை 10 சதவிகிதத்துக்குமேல் வைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் கமாடிட்டி சந்தைகள் சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடையவை. அவை எப்போது ஏறும், இறங்கும் என்பதெல்லாம் தெரியாது.’’

– லலிதா ஜெயபாலன்



Source link

Leave a Reply

Your email address will not be published.