Tamil Entrepreneurs

ஜிஎஸ்டி வரிவிதிப்பை தவிர்க்க வித்தியாசமாக யோசித்த வியாபாரிகள் ~ என்ன செய்தார்கள் தெரியுமா?


அண்மையில், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பிராண்ட் அல்லாத அரிசி, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது 25 கிலோவுக்கு மேல் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு வரி இல்லை.

25 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தயிர், பனீர் உள்ளிட்ட அனைத்துக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த வரி உயர்வு, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

அரிசி மூட்டைகள்

பணக்காரர்களும், மொத்தமாக வாங்குபவர்களும்தான் 25 கிலோவுக்கு அதிகமாக இந்த பொருட்களை வாங்குவார்கள். ஏழை எளிய மக்கள் ஒவ்வொரு நாளைக்கும் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கி வருகிறார்கள். ஆனால் அரசின் முடிவு, இவர்களுக்குத்தான் சுமையை உண்டாக்குவதாக அமைந்தது.

பணமிருப்பவர்களும், மொத்தமாக வாங்குபவர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை. 25 கிலோவுக்கு குறைவாக வாங்குகிற பொருட்களுக்கு 5 சதவிகித வரி என்று ஏழைகளைத்தான் வாட்டி வதைக்கிறது அரசு என்று, பலரும் விமர்சித்தார்கள்.

இந்த நிலையில், அரசு விதித்த 5 சதவிகித வரி முடிவையும் வித்தியாசமாக யோசித்து கில்லாடியாக திட்டமிட்டிருக்கிறார்கள் வியாபாரிகள். அது வேறொன்றுமில்லை 25 கிலோவுக்கு தானே வரி. 25 கிலோ அரிசி பைகளை, ஏன் 26 கிலோவாக பேக்கிங் செய்யக்கூடாது என்று யோசித்தனர்.

GST

அதன்படியே அரிசி, கோதுமை உள்ளிட்ட வியாபாரிகள் 26 கிலோவில் பைகளைத் தயார் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இன்னும் சிலர் 30 கிலோ பைகளையும் தயாரித்துள்ளனர். இப்படி வித்தியாசமாக யோசித்து வியாபாரிகள் எடுத்த முடிவால் ஜிஎஸ்டி வரி பிரச்னைக்கு பலே தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தென்னிந்திய வணிகர்கள் பேரவை தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டோம்.

விக்கிரமராஜா

“அரசு கொஞ்சமும் யோசிக்காமல் பிராண்ட் அல்லாத பொருட்களுக்கும் பேக்கிங் செய்யப்பட்டால் வரி உண்டு என்று அறிவித்தது. அதை பொதுவாக அறிவித்திருந்தாலும் பரவாயில்லை. அதிலும் 25 கிலோ வரைக்கும் தான் வரி என்று கூறியது, ஏழை மக்களை பாதிப்பதாகவே பார்க்கப்பட்டது. இதனால் வணிகர்களுக்கும் வேலை பளு அதிகம்.

இந்நிலையில் வியாபாரிகள் 26 கிலோ பைகளையும் 30 கிலோ பைகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டார்கள். இவற்றுக்கு வரி விதிப்பு இருக்காது. இது மக்களுக்கும் பலன் தரும். வியாபாரிகளுக்கும் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான வேலை இருக்காது. எனவே விற்பனை அளவை மாற்றியிருக்கிறோம். கூடுதல் வரிச் சுமை இல்லாமல் கூட்டப்பட்ட எடைக்கான விலையை மட்டும் மக்கள் செலுத்தினால் போதும்.” என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.