
அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), உலகம் முழுவதுமுள்ள டாப் பில்லியனர்கள், மில்லியனர்கள், வளர்ந்து வரும் பணக்காரர்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிடும்.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இப்பட்டியலில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 12,11,460 கோடி ரூபாய். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு தன்னுடைய செல்வதை மூன்று மடங்காக உயர்த்தி உள்ளார் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 7,10,723 கோடி. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவரின் பண மதிப்பு 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

டிமார்ட் சூப்பர்மார்கெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 2,22, 908 கோடி ரூபாய்.

சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) – வின் தலைவர் சைரஸ் பூனவல்லா 1,73,642 கோடி ரூபாய் சொத்து மதிப்பைப் பெற்று நான்காவது இடத்திலும், HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் 1,72,834 கோடி ரூபாய் சொத்து மதிப்பைப் பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

ஓ.பி.ஜிண்டால் குரூப்பின் (O.P. Jindal Group) தலைவரும், அரசியல் வாதியுமான சாவித்ரி ஜிண்டால் ரூ. 1,32,452 கோடி சொத்து மதிப்பைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியப் பணக்காரர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற பெண் பில்லியனர் இவரே.

ரூ. 1,25,184 கோடி சொத்து மதிப்பைக் கொண்டு சன் பார்மாக்யூடிள்ஸ் (Sun Pharmaceuticals) நிறுவனர் திலிப் சங்வி ஏழாவது இடத்திலும், 1,22,761 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டு ஹிந்துஜா சகோதரர்கள் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் பிர்லா 1,21,146 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டு ஒன்பதாவது இடத்திலும், 1,17,915 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டு பஜாஜ் குடும்பம் பத்தாவது இடத்தையும் பிடித்தது.