
பங்குச் சந்தை முதலீட்டில் மிகப் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும், நஷ்டப் படாமல் இருக்கலாம்; ஓரளவு நல்ல லாபத்தையும் அடைய முடியும். பங்குச் சந்தை டிப்ஸ்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் டிப்ஸ் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பங்கு முதலீட்டை ஆரம்பிக்கும் முன் நாமே கொஞ்சம் ‘ஹோம் வொர்க்’ செய்வது நல்லது.

வாங்கப் போகும் பங்கு நிறுவனத்தின் ஃபண்டமென்டல் விவரங்களைப் பார்க்க வேண்டும். நிதிநிலை, நிர்வாகம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைப் பார்க்கவும்.

பங்கின் விலை ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. எனவே அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்றால்தான் லாபம் கிடைக்கும்.

நீங்கள் வர்த்தகரா, முதலீட்டாளரா என்பது முதலில் தெளிவு தேவை. முதலீட்டாளர் எனில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்குப் பெரிதாக எதிர்வினை ஆற்ற தேவையில்லை. இறக்கங்களில் பங்குகளை வாங்கி சேர்த்துக்கொண்டே வரலாம்.

வர்த்தகர்கள் சரியான பங்கை இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். ஏற்றம் பங்கு வாங்கிய அன்றோ, சில நாட்களிலோ, சில வாரங்களிலோ இருக்கலாம். அதற்கேற்ப பொறுமை காத்து விற்க வேண்டும்.

பங்கு முதலீட்டில் ஸ்டாப்லாஸ் என்பது முக்கியம். எந்த அளவுக்குக் கீழே இறங்கினால் நாம் பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். நிறுவனங்களின் தொழில் எதிர்காலம் பொருத்து நீண்டகாலத்துக்கான பங்குகளை வாங்கலாம்.

கூடுமான வரை கடன் இல்லா நிறுவனப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும். சிறிதளவு கடன் இருக்கலாம். தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் வாங்கப் பட்டிருந்தால் தவறில்லை. ஆனால், ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என இருந்தால் அந்த நிறுவனப் பங்கை தவிர்க்க வேண்டும்.

அடிப்படையில் எவ்வளவு நல்ல பங்காக இருந்தாலும் மொத்த முதலீட்டையும் ஒரே பங்கில் போட்டு விடக் கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் பங்கு முதலீட்டில் ரிஸ்க் மிகவும் அதிகரித்துவிடும்.

பதிலாக, வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள 5-6 துறைகளில் சிறந்த பங்குகளைத் தேர்வுசெய்து நம்மிடமுள்ள முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.