Chennai
oi-Jeyalakshmi C
சென்னை:5,8,10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. மேலும் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படத்துவங்கி, இறுதித்தேர்வுகளும் முடிவடைந்து விட்டன. இதை தொடர்ந்து கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழக பள்ளிகள் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அதிர்ச்சி! விக்கிரவாண்டி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி? 10 நாளில் 7 தற்கொலை முயற்சிகள்!

பள்ளிக்கு வராத மாணவர்கள்
இந்த சூழலில் நடப்புக்கல்வியாண்டில், பள்ளிக்கு சரியாக வராத, இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது. இதுதொடர்பாக, 41 பக்கங்கள் கொண்ட உத்தரவுகளை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வாரத்திற்கு, 3 முதல் 4 நாட்கள் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் குறித்து, கல்வித்துறையில் தலைமை ஆசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விபரங்கள்
மேலும் 2 வாரங்களில், 6 முதல் அதற்கும் மேலாக பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை எனில், வட்டார வளமைய பயிற்றுநர்கள், தங்களுக்கான பகுதியில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று வாரங்களில் ஒன்பது நாள் மற்றும் அதற்கும் மேலாக மாணவர்கள் வரவில்லை எனில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அதுகுறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள்
மேலும் நான்கு வாரங்களில் மாணவர்கள் முழுமையாக வரவில்லை என்றால், அவர்கள் பள்ளிக்கு வராதவர்கள், இடை நின்றவர்கள் என்று கருதப்பட்டு, அந்த மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தனி கவனம் செலுத்த வேண்டும்
இதுதொடர்பான வழிகாட்டுதலில் , புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 5,8,10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
The Department of School Education has advised the teachers to ensure that the students who have completed 5th, 8th and 10th standard are properly enrolled in the subsequent classes. The Department of School Education has issued new guidelines regarding the program to identify and re-enroll children in school cells.
Story first published: Tuesday, July 26, 2022, 18:44 [IST]