Tamil Entrepreneurs

“மத்திய அரசின் புள்ளியியல் துறையில் பணிபுரிபவர்கள் என்னதான் செய்கிறார்கள்?'' பி.டி.ஆர் கேள்வி


கொரோனா பெருந்தொற்று நம் எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. இன்னும் பலர் அதன் பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டுவர முடியவிலை. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழில் துறைகளின் நிலையை அரசுக்கு சரியாக எடுத்துச் சொல்லவும், பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய அரசு செய்ய வேண்டியது என்ன என்பதை வலியுறுத்தும் வகையிலும் “பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்” என்ற புத்தகத்தை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் தயார் செய்துள்ளது.

பெருந்தொற்று காலம்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமானது, சமூக பொருளாதார மேம்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் கல்வி நிறுவனம் ஆகும். மேம்பாட்டுத் துறையில் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

கொரோனா பெருந்தொற்று தமிழகப் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்களை உண்டாக்கியது, மக்களின் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தியது, தமிழகம் என்னென்ன சவால்களை எல்லாம் சந்தித்தது என்பதை ஆராய்ந்து உரிய தரவுகளுடன் 19 ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

கோவை கொரோனா

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ப.கு.பாபு இந்தப் புத்தகத்தைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆதிசேய்யா அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அளித்துப் பேசினார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ப.கு.பாபு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் சிறப்புகளை சுருக்கமாக விவரித்தார் அவர்.

அவர் பேசி முடித்தபின், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையருமான நீ.கோபாலஸ்வாமி பேசினார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் பல்வேறு ஆய்வுகளைச் செய்வதற்குத் தேவையான நிதி உதவியைத் தமிழக அரசாங்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி | பழனிவேல் தியாகராஜன்

அவருக்கு அடுத்துப் பேசினார் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன். “மத்திய அரசு சார்பாக மாநில அமைப்புகள் தரவுகளைச் சேகரிக்கிறார்கள். ஆனால், அந்தத் தரவுகள் உடனடியாக மாநில அரசுகளுக்குக் கிடைப்பதில்லை. அது நம்மிடம் திரும்ப வரும்போது தொடர்பற்றதாகவும் பயனற்றதாகவும் போய்விடுகிறது. மாநில அரசு அதற்கு தேவையான தரவுகளைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான தரவுகள்தான் சரியான திட்டங்களை உருவாக்க உதவும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் கடைசியாக சிறப்புரை ஆற்றினார் தமிழக அரசின் நிதி மற்றும் திட்டம், மனிதவளம் ஆகிய துறைகளின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

“பெரும்பாலும் அரசின் கொள்கைகளானது, தத்துவங்கள், மதிப்பீடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. ஆனால், கொள்கைகளும் திட்டங்களும் அதன் சரியான இலக்கை எட்டுகிறதா என்பதுதான் தெரிவதே இல்லை. காரணம், சரியான முறையான தரவுகள் இல்லை. பெரும்பாலும், எந்த முறையான ஆய்வுகளும், தரவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி | கோபாலஸ்வாமி

நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இதுவரை அந்தத் துறைகளின் பலனை நான் அடைந்ததில்லை. சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் போன்ற ஆய்வு நிறுவனங்கள் முன்வந்து அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு பலன் தரும் கொள்கைகளை அரசு வகுக்க வழி உண்டாகும்” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சி நடந்ததால், நூற்றுக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது!Source link

Leave a Reply

Your email address will not be published.