Tamil Entrepreneurs

மீண்டு வரும் எல்.ஐ.சி; மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்… என்ன விலைக்கு உயரும்?-ஜே.பி.மார்கன் கணிப்பு


வெளியீட்டு விலையிலிருந்து 31 சதவிகிதம் வீழ்ச்சி கண்ட எல்.ஐ.சி பங்கு, தற்போது ஓரளவுக்கு ஏற்றத்தின் போக்கில் நகர ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், சர்வதேச ரிசர்ச் நிறுவனமான ஜே.பி.மார்கன் இப்பங்கு மீதான தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

எல்.ஐ.சி

பங்குச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய எல்.ஐ.சி-யின் பொதுப் பங்கு வெளியீடு, கடந்த மே மாதம் தொடங்கியது. எல்.ஐ.சி நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் மட்டுமல்லாமல், இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் எல்.ஐ.சி என்கிற அளவுக்கு மக்களின் மனதில் பதிந்து போன நிறுவனமாகும். எனவே, இந்நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு, எல்லோருமே அமோக வரவேற்பு கொடுத்தனர்.

பாலிசிதாரர்களுக்கும் எல்.ஐ.சி ஊழியர்களுக்கும் சலுகை விலையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. பங்கு பட்டியலான பிறகு, நன்றாக ஏற்றம் அடையும், நல்ல லாபம் பார்க்கலாம் என்ற ஆசையுடன் பலரும் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

ஆனால், மே 17 அன்று பட்டியலாகிய எல்.ஐ.சி தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. பட்டியல் ஆன அன்றே ரூ.872-க்கு இறக்கம் கண்டு வர்த்தகமானது. அதன் பிறகும் தொடர்ந்து சரிந்து வந்து ஒரு மாத காலத்தில் ரூ.700-க்குக் கீழாகக் குறைந்தது. அதிகபட்சமாக ரூ.650 வரை இறக்கம் கண்டு வர்த்தகமானது. கிட்டத்தட்ட வெளியீட்டு விலையிலிருந்து 31 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. இந்த அளவு இறக்கத்தை அடையும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

எல்.ஐ.சி

இதனால் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த இறக்கத்தால் எல்.ஐ.சி-யின் சந்தை மதிப்பு ரூ.6.02 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.26 லட்சம் கோடியாகக் குறைந்தது. இந்நிலையில், தற்போது எல்.ஐ.சி பங்கின் இறக்கம் கட்டுக்குள் வந்திருப்பதோடு மெள்ள ஏற்றத்தின் பக்கமும் திரும்பியிருக் கிறது. காரணம் சமீப நாள்களில் இப்பங்கில் ஏற்றத்தின் நகர்வுகள் தெரிகின்றன.

இதற்கிடையில், எல்.ஐ.சி பங்கு குறித்து சர்வதேச ரிசர்ச் நிறுவனமான ஜே.பி.மார்கன் பாசிட்டிவ்வான கணிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வர்த்தகமாகும் விலையிலிருந்து 30 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.840 என்ற நிலையை எட்டும் என்ற இலக்கை ஜே.பி.மார்கன் கணித்துள்ளது.

ஜே.பி.மார்கன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; பங்குச் சந்தை எல்.ஐ.சி-யைச் சந்தையின் முகமாகப் பார்க்கிறது. சந்தையில் நிலவும் தற்போதைய பலவீனமான சூழல் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. மேலும், எல்.ஐ.சி-யின் மதிப்பையும் சந்தை தவறாக நிர்ணயித்துள்ளது. நாங்கள் எல்.ஐ.சி மதிப்பு தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மதிப்பைப் போல் பிஇ விகிதத்தில் 2 – 3 மடங்கு அளவுக்கு இருக்குமென எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய கணிப்பு நியாயமான ஆய்வுக்குப் பிறகு, 2023 நிதி ஆண்டின் பிஇ விகிதத்தின் ஒரு மடங்கு என்ற மதிப்பிலேயே கணித்திருக்கிறோம்.

எல்.ஐ.சி

தற்போது எல்.ஐ.சி பங்கு 2023 நிதி ஆண்டின் பிஇ விகிதத்தில் 0.75 மடங்கு என்ற மதிப்பில் வர்த்தகமாகிறது. எனவே, ரூ.840 என்ற மதிப்பை எல்.ஐ.சி எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் நன்றாகவே இருக்கின்றன. இந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் சொத்துகள் உள்ளன. மேலும், 185 சதவிகித சால்வன்சி விகிதத்தையும் எல்.ஐ.சி கொண்டுள்ளது. எனவே, இந்த விலையை எட்டுவதற்கான சாத்தியம் சிறப்பாகவே உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

ரூ.840 என்ற இலக்கு விலை எல்.ஐ.சி பொதுப் பங்கு வெளியீட்டு விலையைவிடக் குறைவாக இருந்தாலும் தற்போதைய விலையிலிருந்து ஏற்றம் அடைந்து இந்த இலக்கை எட்டினால் அது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருக்கும்.



Source link

Leave a Reply

Your email address will not be published.