Tamil Entrepreneurs

ரயில் நிலையத்தில் உள்ளூர் பொருட்கள் விற்பனைக்கு மக்கள் அமோக வரவேற்பு.!


ரயில்வே துறை உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் `ஒரு நிலையம் ஒரு பொருள்’ (One Station One Product) திட்டத்தின்கீழ் இலவசமாக விற்பனை செய்ய உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளித்து வருகிறது.

பனை பொருள்கள்

அந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 23 முதல் கோவில்பட்டியில் கடலை மிட்டாய், தூத்துக்குடியில் மக்ரூன், ராமநாதபுரத்தில் கருவாடு, திருச்செந்தூர், திருநெல்வேலியில் பனைபொருள்கள், திருமங்கலத்தில் கைலி, திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி சேலைகள், மதுரையில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்தந்த ஊரின் பாரம்பர்யப் பெருமையை எடுத்துச் சொல்லும் இந்தப் பொருள்கள் விற்பனை ரயில் பயணிகளிடம் ஆதரவைப் பெற்றுள்ளது.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில்
கருவாடு

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட ஊடகத் தொடர்பாளர், “கடந்த 10 நாள்களில் திருச்செந்தூர், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் ரூ.2,81,960 மதிப்புள்ள பனைப்பொருள்கள் விற்பனை ஆகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1,84,660 மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனையாகியுள்ளது.

குறிப்பிட்டுள்ள எட்டு ரயில் நிலையங்களிலும் கடந்த 10 நாள்களில் ரூ.6,91,473-க்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளன.

உள்ளூர் பொருள்களைத் தயாரிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால், 15 நாள்களுக்கு ஒருமுறை விண்ணப்பம் பெறப்பட்டுத் தகுதியான உற்பத்தியாளர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி மக்ரூன்

மீண்டும் ஜூலை 8 முதல் 15 நாள்களுக்கு ராமேஸ்வரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, பழனி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், கொடைக்கானல் ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடல்பாசி, சேவு, பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், ஆயத்த ஆடை, பேப்பர் பொருள்கள், விவசாய விளைபொருள்கள், மூங்கில் இருக்கைகள், மண்பாண்ட பொருள்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீர் திராட்சை, மல்லிகை மலர், வெண்ணை, மர விளையாட்டுப் பொருள்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனை பொருள்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருள்களை விற்பனை செய்ய விரும்புவோரிடம் விருப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கைத்தறி சேலை விற்பனை

கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு அளிக்க தகுதி பெற்றவராவார்.

விருப்ப மனு விண்ணப்பங்களை www.sr.indianrail.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தகப் பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். அன்று மாலை 03.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும்” என்றார்.

ரயில் நிலையங்களை வர்த்தக மையங்களாக மாற்றும் ரயில்வே துறையின் முயற்சி பாராட்டத்தக்கது என்பதில் சந்தேகமே இல்லை!



Source link

Leave a Reply

Your email address will not be published.