Tamil News

eps slams mk stalin in chengalpattu aiadmk protest | ஸ்டாலின் ஒரு பொம்மை மகன் மருமகன் மனைவிதான் எல்லாம் செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்


திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் அனைத்திந்திய அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.  

அப்போது பேசிய அவர்,”தமிழ்நாட்டின் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இப்போது தமிழ்நாட்டிற்கு நான்கு முதலமைச்சர் இருக்கின்றனர். திமுக அரசின் குடும்ப ஆட்சி காரணமாக மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகியவைதான் இந்த ஆட்சியில் இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க | இபிஎஸ்-க்கு தான் சாவி… ஒரே போடாக போட்ட உச்சநீதிமன்றம்…

பொங்கல் என்றாலே திமுக!

செங்கல்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, செங்கல்பட்டை தலைமை இடமாக கொண்டு மாவட்டத்தை உருவாக்கியது, அதிமுக அரசு. பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு கழித்து அதிமுக அரசுதான் தடுப்பணைகள் கட்டியிருந்தது. ஒரு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றால் சுமார் 200 கோடி அளவிற்கு செலவாகும். ஆனாலும் வளர்ச்சிக்காக மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு அதிமுக, மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகம் ஆகிய பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். கொலவாய் எரி 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, மதுராந்தகம் ஏரிக்கு 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருவதற்கு அரசாணை வெளியிட்டது, அப்போதைய அதிமுக அரசு. தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து பணியில், 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. 

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் முதல் போனஸ் ஆக சொத்துவரி உயர்த்தப்பட்டது. இப்போது, மக்களுக்கு இரண்டாவது போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, அதுதான் மின்கட்டண உயர்வு. பொங்கல் என்றாலே திராவிட மாடல் ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது. திமுக பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளம் தரமற்ற முறையில் இருந்தது. கடுகுக்கு பதில் இலவம் பஞ்சு விதைகள் கொடுத்திருந்தார்கள். அரிசியில் வண்டு என பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்திருந்தனர்.

கஞ்சா விற்கும் அரசு

சமீபத்தில் செய்தியாளரை சந்தித்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர், நீட் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் என கூறியிருந்தார். இது முற்றிலும் தவறு. காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சி செய்த 2010ஆம் ஆண்டில்தான் நீட் குறித்த அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, திமுக எதிர்க்காமல் இருந்தது. அப்போது, அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆரம்ப முதலே நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | ‘எனது தலைமையில் அதிமுக இணையும்’ தங்கமணி தொகுதியில் பேசிய சசிகலா

தற்போது, போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறதுய. வெளிமாநிலங்களில் இருந்து தான் கஞ்சா தமிழ்நாட்டுக்கு வருவதாக அமைச்சர் ஒருவர் தெரிவிக்கிறார். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் திமுக அரசுதான் இதை தடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்கிறார்கள் என அவர்களே (அரசு) தெரிவிக்கின்றனர். அதில் 146 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை விற்பதே அவர்கள்தான். வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. காவல்துறைக்கு கஞ்சா விற்பவர்கள் யார் என தெரிகிறது, ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது. ஆனால் ஆன்லைன் ரம்மி வியாபாரிகள் இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது திமுக ஆட்சி அமைந்தது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் காரணங்களை முன்வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது” என குற்றஞ்சாட்டினார்.

பண்ரூட்டி ராமசந்திரன் மீது தாக்கு

அதிமுகவிற்கு எதிராக அறிக்கைவிட்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை, எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து பேசுகையில், “அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராகி யானையின் மீது சென்றார். அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்றார். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. தயவு செய்து குறை கூறாமல் இருங்கள், இல்லையென்றால் சென்றுவிடுங்கள். நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்” என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும் படிக்க | 40 தொகுதிகளுக்கு குறி; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக – ஸ்டாலின் போட்ட கட்டளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.