பீகார் மாநிலம், மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா என்னும் கிராமத்திலும் இதேபோன்று வித்தியாசமான மரபு ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராமாயணத்தில் கடவுள் ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தில் கழித்ததைப் போல, ஒவ்வொரு ஆண்டும் வைசாக் (2ஆவது மாதம்) மாதத்தின் நவமி தினத்தன்று 12 மணி நேரம் ஊரைக் காலி செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
முன்னோர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சடங்கை, கிராம மக்கள் இன்றளவிலும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் ஊரே வெறிச்சோடி காணப்படுகிறது.
காடுகளில் தஞ்சம்
நௌரங்கியா கிராமத்தில் தாரு என்னும் இனமக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்கள் உள்பட அனைவருமே நாள் முழுவதும் ஊரை காலி செய்து, கிராமத்திற்கு வெளியே உள்ள காடுகளில் தஞ்சம் அடைகின்றனர். தங்கள் கூடவே கால்நடைகளையும் அழைத்துச் செல்கின்றனர். இந்த மரபைச் செய்வதன் மூலமாக பெண் தெய்வத்தின் அருள் கிடைப்பதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
ஏன் இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது?
எந்தவொரு மரபும் திடீரென, தான்தோன்றித் தனமாக கடைப்பிடிக்கப்படாது. ஒவ்வொரு மரபுக்கு பின்னும் ஏதோவொரு நம்பிக்கை அல்லது வரலாறு என்பது இருக்கும். அந்த வகையில், நௌரங்கியா கிராம மக்கள் கடைப்பிடிக்கும் மரபிலும் சில நம்பிக்கைகள் இருக்கின்றன.
Also Read : உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண் – யார் இவர்?
இதுகுறித்து கிராம பெரியவர்கள் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் கிராமத்தில் பெருந்தொற்று நோய்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் போன்ற துன்பங்கள் ஆட்டிப் படைத்தன. குறிப்பாக, சின்னம்மை நோய் மற்றும் காலரா போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கிராமத்தில் அவ்வபோது திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டன. அந்த சமயத்தில், கிராம தேவதையை வழிபாடு செய்யுமாறு சாது பாபா பிரம்மாஸ் எங்கள் ஊர் மக்களிடம் அறிவுறுத்தினார். குறிப்பாக, நவமி தினத்தில் அனைத்து மக்களும் ஊரை காலி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்’’ என்று குறிப்பிட்டனர்.
Also Read : ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்!
துர்கை அம்மன் வழிபாடு
ஆண்டுகள் பல கடந்த பிறகும் மக்களின் நம்பிக்கை அப்படியே நீடிக்கிறது. குறிப்பிட்ட நாளில் ஊரை விட்டு செல்லும் கிராம மக்கள், வால்மீகி புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள துர்கை அம்மனை வழிபடுகின்றனர். வனப்பகுதியில் இந்த அளவுக்கு கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை சார்பில் கடந்த காலங்களில் பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால், அவை அனைத்தையும் முறியடித்து கிராம மக்கள் தங்கள் மரபையும், வழிபாட்டையும் தொடருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.