இந்தியப் பங்குச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி புதிய பங்கு வெளியீடு இன்றுடன் (மே 9-ம் தேதி) நிறைவடைகிறது.
முதலில் 60,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கு முடிவு செய்திருந்த இந்திய அரசு பல்வேறு உலக காரணிகளால் இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியை 21,000 கோடி ரூபாயாக குறைத்தது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, நோய் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பு, சீனாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு, அதிகரிக்கும் பணவீக்க விகிதம் போன்ற பல காரணங்களால் பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவியது.
இந்தப் பிரச்னைகளுக்கு நடுவே மத்திய ரிசர்வ் வங்கி எல்ஐசி பங்கு மூலதன வெளியீடு தொடங்கிய முதல் நாளில் வட்டி விகிதங்களை உயர்த்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கெனவே சரிந்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகளில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல மேலும் சரிவை இது ஏற்படுத்தியது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்திற்கு போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.