Health

Lyricist Na. Muthukumar 6th Death Anniversary Special Story | நா. முத்துக்குமார் பெயரை சொன்னால் உள் நெஞ்சில் கொண்டாட்டம்!

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன் 
“இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!….

– நா. முத்துக்குமார்

தமிழ் சினிமா பாடல்களிலும், கவிதைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நா. முத்துக்குமார். தமிழ் சினிமா மாறினாலும் பாடல் வரிகள் மாறாமல் இருந்தபோது வைரமுத்து உள்ளே நுழைந்து எப்படி அதன் தன்மையையும், போக்கையும் மாற்றினாரோ நா. முத்துக்குமார் பேனா எடுத்தபோது புதுமைப்பட்டிருந்த தமிழ் மேற்கொண்டு எளிமையாகியது. அந்த கலை முத்துக்குமாருக்கு வெகு இயல்பாகவே வாய்த்தது. அவரது பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் என அனைத்துமே கலிஃபோர்னியா சாஃப்ட்வேர் தமிழனுக்கும் புரியும், கன்னியாகுமரி மீனவருக்கும் புரியும். அதனால்தான் அவர் உயிரிழந்தபோது அவ்வளவு கூட்டமும், உயிரிழந்த பிறகும் இவ்வளவு கூட்டமும் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது.

தற்போதைய இளைஞர்களின் மீட்டரை பிடிப்பது எளிதான காரியமில்லை என பலர் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களது மனதுக்குள்ளும் நா. முத்துக்குமார் இருக்கிறார் என்றால் அவரது உழைப்பு என்பது அவ்வளவு சாதாரணமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் வாசிக்க முடியும், எழுத முடியும். எழுத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் தீராத பசி இருக்கும் ஒருவரால் மட்டும்தான் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்கி மற்ற நேரங்களில் எழுத்தையும், வாசிப்பையும் செய்ய முடியும். எனில் முத்துக்குமாரின் ஒரு நாளின் உழைப்பை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அப்படி அவர் உழைத்தது ஒருசில மாதங்கள் இல்லை. பல வருடங்கள்.

Na. Muthukumar

ஒருவர் எழுதும் பாடலில் அவர் மேதாவித்தனம் காட்டுவதை விரும்பாதவர் நா. முத்துக்குமார். அப்படி அவரும் இதுவரை காட்டியதில்லை. தெய்வ திருமகள் படத்தில் ஆரிரோ ஆராரிரோ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். மனதால் வளராத தந்தைக்கும், வயதால் வளராத பிள்ளைக்கும் இருக்கும் பாசத்தை கூறும் பாடல். அந்தப் பாடல் வேறு எவரின் பேனாவுக்கோ சென்றிருந்தால், அந்தப் பாசத்தை பல வழிகளில் கூறியிருக்க வாய்ப்புண்டு. ஆனால், முத்துவின் பேனா மட்டும்தான், “வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே” என எழுதியது.

மேற்கூறிய வரிகளை கேட்கும்போது எளிதாக இருக்கும். ஆனால் அந்த எளிய வரிகளை எழுதுவதற்கு எவ்வளவு பெரிய தகப்பனாக, கவிஞராக முத்துக்குமார் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த வரிகளின் ஆன்மாதான் தெய்வ திருமகள் படத்தின் கதையும். இப்படி பல பாடல்களில் ஒருசில வரிகளிலேயே படத்தின் கதையையும், கவிஞனின் ஆன்மாவையும் கலந்து கொடுத்ததால்தான் பல வருடங்களுக்கு அவரால் நம்பர் 1 என்ற இடத்தில் இருக்க முடிந்தது.

Na. Muthukumar

முத்துக்குமாரை பாராட்டியபோது சுஜாதா இப்படி கூறினார், “சினிமா எனும் பூதம் முத்துக்குமார் எனும் கவிஞனை தின்றிடாமல் இருக்க வேண்டும்”. நல்வாய்ப்பாக சினிமா எனும் பூதத்துக்குள் முத்துக்குமார் இருந்தாலும் தன்னை எப்போதும் ஒரு கவிஞனாகவே உணர்ந்துகொண்டார். தனது எழுத்தையும் அப்படியே அமைத்துக்கொண்டார். கண்ணதாசனுக்கு, வாலிக்கு, பட்டுக்கோட்டைக்கு கிடைத்தது போல் தத்துவ வரிகளை உதிர்க்கும் சூழ்நிலைகள் பெரிதாக முத்துக்குமாருக்கு பாடல்களில் அமையவில்லை. தத்துவம் கூறும் சூழ்நிலைகள் கிடைக்காவிட்டால் என்ன? கிடைக்கும் சூழ்நிலையில் தத்துவம் கூறுவேன் என சொல்லி முத்துக்குமார் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தத்துவத்தை எளிமையாக கூறி சென்றார். 

மேலும் படிக்க | நா. முத்துக்குமார் – மழை நின்ற பிறகும் தூறிக்கொண்டிருப்பவர்

இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்பவன் மனிதனாகிறான். அதனை அடுத்தவருக்கு புரியவைப்பவன் கவிஞனாகிறான். முத்துக்குமார் இந்த இரண்டுமானவர். அவருக்கு இந்த வாழ்க்கை குறித்தும், உறவுகள் குறித்தும் மிகப்பெரிய புரிதல் இருந்தது. அதனால்தான்,

நேற்றென்னும் சோகம்

நெருப்பாய் வந்து தீ மூட்டும்

இன்றென்னும் மழையில்

அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே என எழுதினார்.

பொதுவாக காதல் பாடல் எழுதுபவர்கள், தத்துவ பாடல் எழுதுபவர்கள் இளைஞர்களுக்கான மொழியை பிடிப்பதில் சறுக்குவது உண்டு. முத்துக்குமார் அதில் சறுக்காதவர். அவரால், 500 அடிச்சும் அவுட்டாகாத டெண்டுல்கர்தான் நம்மாளு என்று எழுதவும் முடியும், நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு எனவும் எழுத முடியும்.

Muthukumar

வெறும் பாடல்கள் மூலம் மட்டும்தான் இளைஞர்களால் முத்துக்குமார் அதிகம் கொண்டாடப்படுகிறாரா என்றால் நிச்சயம் இல்லை. கவிதைகளிலும் வாசகர் மனதுக்குள் எவ்வளவு ஆழமாக இறங்கி தூர் எடுக்க முடியுமோ அவ்வளவு தூர் எடுத்தவர் முத்துக்குமார். 

வேலையில்லாத ஒரு இளைஞனுக்காக  முத்துக்குமார் இப்படி எழுதுகிறார், “வேலையில்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை”. இந்த வரிகளை எந்த வேலையில்லாத இளைஞன் கேட்டாலும் அவனது மனதுக்குள்ளும், நினைவுக்குள்ளும் நா. முத்துக்குமார் தோன்றி மறைவார். அது காலத்திற்கும் எழுதப்பட்டிருக்கும் விதி. ஏனென்றால் இங்கு வேலையின்மை என்பது எப்போதும் தீரப்போவதுமில்லை.

Muthukumar

இளைஞர்களுக்கு இப்படி என்றால் கவிஞர்களுக்கு இப்படி எழுதுகிறார்,

பொண்டாட்டி தாலியை அடமானம் வைத்து 
கவிதை தொகுப்பு போட்டால் 
தாயோளி மகனுகளுக்கு 
விசிட்டிங் கார்டு மாதிரி ஃப்ரீயா கொடுக்க வேண்டியதா இருக்கு…  இந்த வரிகளில் எவ்வளவு பெரிய ஆத்திரம், எவ்வளவு நக்கல் இருக்கிறது.

அதேபோல், 

பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய் என எழுதியதில் இந்தச் சமூகத்தின் மீதும், மற்றவர்களை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்யும் மனிதர்கள் மீதும் அவருக்கு எவ்வளவு பெரிய கோபம் இருக்கிறது என்பதை உணர்த்தும். 

இப்படி நா. முத்துக்குமார் அனைத்து விதங்களிலும், அனைத்து வழிகளிலும் ரசிகர்களின் மனதுக்குள் எளிமையாக நுழைந்து வலுவான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால்தான் அவரது பிறந்தநாளை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுகின்றனர். நினைவுதினத்தை நிகழ்வுகளாகவும், நினைவுகளாகவும் அனுசரிக்கின்றனர்.

மரணம் குறித்து நா. முத்துக்குமார் இப்படி எழுதியிருப்பார், “மரணம் ஒரு கறுப்பு ஆடு அது சில நேரங்களில் நமக்கு பிடித்தமான ரோஜாப் பூவை தின்றுவிடுகிறது”…

Muthukumar

ஆம் அந்த கறுப்பு ஆடு நமக்கு பிடித்த முத்துக்குமாரை தின்று இன்றோடு ஆறு வருடங்கள் நிறைவடைகின்றன. ஒன்று மட்டும் நிச்சயம், எந்த வருடத்தில், எந்த நிமிடத்தில் நா. முத்துக்குமாரின் பெயரை கேட்டாலும் அனைவரது உள் நெஞ்சுக்குள்ளும் கொண்டாட்டம் பிறக்கும். ஏனெனில் முத்துக்குமார் தன்னை தொலைத்து நமக்கு கொண்டாட்டத்தை கொடுத்து சென்றிருப்பவர்.

மேலும் படிக்க | காதல் முகம் மட்டுமல்ல ; வேறு முகங்களும் நா.முத்துக்குமாருக்கு உண்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.