Motivational story in tamil.
Motivational story in tamil. இளம் வயதிலிருந்தே ஆடம்பரமான மோட்டார் பைக்குகள் ஓட்டுவதில் அன்சார் விருப்பம் கொண்டிருந்தார். தாம் பிறந்த ஊரான திருச்சி மாவட்டம் கைலாசபுரத்தில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் பெரும்பாலும் பொழுதைப் போக்குவார்.

“மெக்கானிக்தான் என் ஹீரோவாகத் தெரிந்தார். அவரது கேரேஜ்க்கு வரும் ஒவ்வொரு வேலையையும் எங்களை செய்ய வைப்பார், பதிலுக்கு பைக்குகளை நான் ஓட்டிப்பார்ப்பேன்,” என்றார் அன்சார். இவர் பைக்கிங் பிரதர்ஹுட் (Biking Brotherhood)என்ற சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆண்டுக்கு ரூ.10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம் பைக் ரைடிங்கிற்கான உயர் தரமான ஜாக்கெட்கள், பூட்கள், கையுறைகள்,ரேஸிங் ஆடைகள் தயாரிக்கிறது.
ஒரு சாதாரண வெல்டரின் மகனாக பிறந்து பைக்குகளின் காதலராக தமது சொந்த நிறுவனத்தை தொடங்கியவர் இவர். இது மட்டுமின்றி, பல்வேறு உயர் தரமான பைக்குகளான கேடிஎம், டிரிம்ப், ஹேயாப்ஸா மற்றும் இறுதியாக 2019ஆம் ஆண்டின் பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் என்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பைக் போன்றவற்றை சொந்தமாக கொண்டிருப்பவரின் வாழ்க்கை கதை படிக்கும் வாசகர்களை ஈர்க்கக் கூடியதாகும். அன்சார்(44), குழந்தை பருவத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தவர். ஒரு வெல்டராக அவரது தந்தை மாதம் தோறும் ரூ.750 மட்டுமே சம்பாதித்தார். அன்சார், தமது குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவராவார். மூன்றாவது குழந்தை பிறந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவதாக அன்சார் பிறந்தார்.“என்னுடைய இளம் வயதில் நான் புதுத் துணிகளே அணிந்ததில்லை. என்னுடைய மூத்த சகோதரர்கள் போட்டு உபயோகித்த பழைய துணிகளையே நான் அணிவது வழக்கம்,” என்றார் அன்சார். அவருக்கு 10 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை வேலைக்காக சவூதி அரேபியா சென்றார். சென்னையிலும் அன்சார் மெக்கானிக் ஷாப்களில் நேரம் செலவழித்தார்.“மெக்கானிக்குகளிடம் இருந்து பைக் மற்றும் ரேஸிங் குறித்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். 90-களில் சென்னை வட்டாரத்தில் இரவு நேர பைக் ரேஸ்களில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன்,” என்றார் அன்சார்.அமைதியான சாலைகளில் இரவு நேரத்தில் சென்னையில் அதி வேக திறன் கொண்ட பைக்குகளை ஓட்டும் கலாசாரம் கொண்ட இளம் பந்தய வீரர்கள் இருக்கின்றனர். போலீசார் உள்ளிட்டோர் இதை பொருட்படுத்துவதில்லை.

கைலாசபுரத்தில் ஒய்எம்சிஏ நடத்தி வந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை அன்சார் படித்தார். பின்னர் சென்னையில் எம்ஜிஆர் ஆதர்ஷ் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கோவையில் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணு பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார்.
சர்வதேச பிராண்ட்களை விடவும் மிகவும் குறைந்த விலையில் அன்சார் ஜாக்கெட்கள் தைத்துக் கொடுக்கிறார். அதே நேரத்தில் இந்திய சூழல்களுக்கு ஏற்ப பாதுகாப்பிலும், வசதியிலும் கவனம் செலுத்துகிறார்
1998ஆம் ஆண்டு சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மாதம் ரூ.2500 சம்பளத்தில் வேலை கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வரை அங்கு வேலை பார்த்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பரில் வேலையை விட்டு விலகிய அவர், தனது சேமிப்பு ரூ.50,000 மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய தொகை ரூ.2.5 லட்சம் எல்லாம் சேர்த்து முதலீடாகப்போட்டு பிராண்ட் டிசர்ட்கள் விற்கும் கடையைத் தொடங்கினார்.“கடை நன்றாக போனது. நான் நண்பர்களிடம் இருந்து வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்துவதில் அவசரம் காட்டினேன். மாதம் ரூ.8000 முதல் ரூ.10,000 வரை லாபம் சம்பாதித்தேன். ஆகவே பணத்தை திரும்பிக் கொடுக்க ஆரம்பித்தேன்.”
“ஒரு ஆண்டுக்குள் கடனில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் புதிய சரக்குகள் இருப்பு வைப்பதற்கான பணம் இல்லை. வணிகம் வளர்ச்சியடையும் வரை அதில் கிடைக்கும் லாபத்தை அதிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்ற பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.”
Vision
ஏறக்குறைய அதே தருணத்தில், மொபைல் சிம் கார்டுகள் விற்பனை அதிகரித்திருந்தது. ஏர்டெல், ஹச் மற்றும் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து அன்சார் தனது கடையிலேயே சிம்கார்டுகள் விற்கத் தொடங்கினார்.ஒவ்வொரு போஸ்ட்பெய்டு விற்பனைக்கும் அவருக்கு ரூ.1000 கிடைத்தது. தினமும் குறைந்தது ஒரு போஸ்ட் பெய்டு சிம் கார்டை அன்சார் விற்பனை செய்தார்.“அருகருகே இருந்த கடைக்காரர்களும் சிம் கார்டுகள் விற்கத் தொடங்கினர். ஓர் ஆண்டுக்குள் இந்த வணிகம் பொலிவிழந்துவிட்டது,” என்று பகிர்ந்து கொள்கிறார்.2004ஆம் ஆண்டு சதர்லேண்ட் என்ற பிபிஓ நிறுவனத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். சென்னையில் அவர்களின் செயல்பாடுகள் தொடங்குவதற்கு உதவியாக இருந்தார். பின்னர் அவர் இன்சிஸ்(INSYS Inc) நிறுவனத்தில் வேலை பார்த்து, அதன் பின்னர் எக்சோரியண்ட்(Xoriant) என்ற புனேவை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டு சம்பளம் ரூ.30 லட்சத்தில் உதவி துணைத் தலைவராக பணியில் சேர்ந்தார். எக்சோரியண்ட் நிறுவனத்தில் இருந்து விலகி 8கேமைல்ஸ் நிறுவனத்தில் அன்சார் 2013ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ஐடி பணியாளர் நியமனத்தை கையாளும் துணை தலைவராக சென்னையில் பணியாற்றினார். பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றியபோதிலும் பைக்குகள் மீதான விருப்பத்தை தம்முள் தக்கவைத்துக் கொண்டிருந்தார். இளைஞராக இருந்தபோது முதன்முதலாக யமாஹா ஆர்எக்ஸ்100 பைக்கை அவர் வாங்கினார். அவரது முதலாவது சூப்பர் பைக் ஒரு கேடிஎம்(KTM ) ஆகும். இதன் விலை ரூ.2 லட்சமாகும். புனேவில் இருக்கும்போது 2011ஆம் ஆண்டில் இந்த பைக்கை வாங்கினார்.

“நான் ஸ்கார்பியோ ஜீப் வைத்திருந்தபோதிலும் கூட, மும்பைக்கு வேலை விஷயமாக என்னுடைய கேடிஎம்மில்தான் செல்வது வழக்கம். அதே போல சென்னைக்கும் பல முறை இதே போல வந்திருக்கின்றேன். தவிர புனேவுக்கு சென்று விட்டும் வந்திருக்கின்றேன். 1200 கி.மீ தூரத்தை 12 மணிமுதல் 13 மணி நேரத்தில் தனியாக பைக்கில் பயணித்திருக்கிறேன்,” என நினைவு கூர்ந்தார் அன்சார்.
டியூக்ஸ் ஆஃப் புனே என்ற முதலாவது சூப்பர் பைக் குழு 2012ஆம் ஆண்டு தொடங்கப்படுவதற்கு அன்சார் ஒரு கருவியாக இருந்தார். டியூக்ஸ் ஆஃப் புனேவை அன்சார் தொடங்கியபோது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரைடர்களுக்கு பாதுகாப்பு கியர் மற்றும் துணிகளுக்கு ஆல்பைன்ஸ்டார்ஸ் என்ற பெயரிலான சர்வதேச பிராண்ட் மட்டுமே இருந்தது. அவர்கள் தயாரிப்புகள் மிகவும் அதிக விலை கொண்டவை. ஒரு ஜாக்கெட்டின் விலை ரூ.25,000 ஆக இருந்தது. எனவே குறைந்த விலையில் ஜாக்கெட்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அன்சாருக்கு ஏற்பட்டது. பைக்கிங் பிரதர்ஹூட் என்ற நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்துக்கு இடையே, அன்சார் புனேவில் இருந்தார்.முதலில் தன்னுடைய எண்ணத்தை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இரண்டு பழைய தையல் எந்திரங்கள், ஒரு ஹெம்மிங் மிஷின் ஆகியவற்றை சென்னையில் 2013ஆம் ஆண்டுக்கு மத்தியில் பாதி விலையில் ஒரு லட்சம் ரூபாயில் வாங்கினார். இரண்டு தையல் கலைஞர்களையும் வேலைக்கு நியமித்தார். அவர்களில் ஒருவர், செருப்பு தைக்கும் தொழிலாளி ஆவார். அவர் சென்னையில் பல ஆண்டுகளாக பைக்கர்களுக்கு தோல் ஜாக்கெட்களை பொருத்தமாக தயாரித்துக்கொடுத்துக் கொண்டிருந்தவர்.ஆரம்ப கட்டத்தில் பழுதான ஜாக்கெட்களை சரி செய்யும் பணிகளை மட்டுமே எடுத்துச் செய்தனர். ஜாக்கெட் பழுது நீக்கும் முன்பு, பழுது நீக்கிய பின் என்று புகைப்படங்களை எடுத்து தமது முகநூல் பக்கத்தில் அன்சார் பகிர்ந்தார்.

நாடு முழுவதும் உள்ள ரைடர்கள் தங்களது பழுதான ஜாக்கெட்களை அஞ்சல் மூலம் சென்னைக்கு அனுப்பி சரி செய்து திரும்பப் பெற்றனர். அனுப்புவதற்கும், பெறுவதற்குமான தபால் கட்டணம் சராசரியாக ரூ.250 ஆக இருந்தது. பழுது நீக்குவதற்காக அன்சார் ரூ.400 முதல் ரூ.500 வரை கட்டணம் பெற்றார்.“நாங்கள் ஜாக்கெட்டின் ஒட்டு மொத்த மேற்பரப்புக்கும் அதாவது முழுமையான ஸ்லீவ் அல்லது காலர் அல்லது பொருத்தமான நிறத்தைக் கொண்ட ஒரு கஃப் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கின்றோம். பழுது பார்க்கப்பட்ட ஜாக்கெட் பார்ப்பதற்கு புத்தம் புதிது போலத் தோன்றும். பைக்கர் புதிதாக ஒன்று வாங்குவதைத் தவிர்த்து இந்த வகையில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்,” என்றார் அவர்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் 120 முகவர்கள் வாயிலாக 60 தயாரிப்புகளை இந்த நிறுவனம் விற்று வருகிறது. ரைடிங் கியர்கள், நிறுவனத்தின் சொந்த இணையதளத்திலும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இதர இ-வணிக இணையதளங்களிலும் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.தையற்கலைஞர்கள், பேட்டர்ன் மாஸ்டர்கள் ஆகியோரைக் கொண்ட 22 பேர் குழுவுடன் சென்னை கொரட்டூரில் உள்ள சொந்த கட்டடத்தில் 6000 ச.அடி இடத்தில் பைக்கிங் பிரதர்ஹூட் தமது செயல்பாட்டை நடத்திவருகிறது.அன்சார், சென்னையில் தமது தாய், மற்றும் மனைவி ஆயிஷாவுடன் வாழ்ந்து வருகிறார். அவரது தந்தை இப்போது உயிரோடு இல்லை. அன்சாருடன் உடன்பிறந்தோர் அனைவரும் சவூதி அரேபியாவில் செட்டில் ஆகியிருக்கின்றனர்.
ரொம்ப டல்லா இருக்கீங்களா.. அப்ப இதைப் படிங்க!
Also read this https://tamil.theweekendleader.com/Success/274/call-of-outsourcing.html