Tamil Entrepreneurs

Nanayam Vikatan – 08 July 2012 – பிஸினஸ் சமூகம் – நாடார்கள்! | business society. Nadaargal sucessfull business family history, naadargal siva nadar.


1975-ல் அவர் சொந்தமாக பிஸினஸ் தொடங்கும்போது அவருடைய முதல் சாய்ஸாக இருந்தது எலெக்ட்ரானிக்ஸ் துறைதான். டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்களை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்க முடிவு செய்தார். மைக்ரோகாம்ப் என்று பெயர் சூட்டப்பட்ட இந்நிறுவனம் நல்ல லாபத்தைத் தரவே, கம்ப்யூட்டர் விற்பனையில் இறங்கினார் சிவ நாடார். 1976-ல் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (ஹெச்.சி.எல்.) நிறுவனத்தைத் தொடங்கினார். இருபது லட்ச ரூபாய் பணத்தில்  இந்நிறுவனத்தை தொடங்கினார்.

அந்த நேரத்தில் சிவ நாடாருக்கு சாதகமாக ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. 1977-ல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்துவிட்டு, ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. ஜனதா அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை நாற்பது சதவிகிதமாக குறைத்துக் கொள்ள வேண்டும்; இல்லா விட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இம்முடிவை ஏற்றுக் கொள்ள விரும்பாத கோகோ கோலா நிறுவனமும், ஐ.பி.எம். நிறுவனமும் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. அன்றைய தேதியில் இந்தியாவில் கம்ப்யூட்டரை விற்பனை செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ஐ.பி.எம்.தான். ஐ.பி.எம்.-ன் இந்த முடிவு ஹெச்.சி.எல். நிறுவனம் கம்ப்யூட்டரை தயாரித்து, விற்பனை செய்வதற்கு சாதக மாக இருந்தது.

கம்ப்யூட்டருக்கான தேவை இந்தியாவைவிட சிங்கப்பூரில் அதிகமாக இருப்பதைக் கண்ட சிவ நாடார், சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, கம்ப்யூட்டருக்குத் தேவையான ஹார்டுவேர்களை விற்க ஆரம்பித்தார். இந்நிறுவனம் தொடங்கிய ஒரே ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையானது.

பிஸினஸ் சமூகம்

பிஸினஸ் சமூகம்

1983-ல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வகையில் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்கத் தொடங்கினார். ‘பிசிபீ’ (சுறுசுறுப்பான தேனி) என்று தனது கம்ப்யூட்டருக்குப் பெயர் வைத்தார். கம்ப்யூட்டர் விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கவே, 1987-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை நூறு கோடி ரூபாயைத் தொட்டது.

1991-ல் நரசிம்மராவ் பிரதமரானபிறகு தாராள மயமாக்கல் கொள்கை வரவே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படத் தொடங்கும் வாய்ப்பு ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு கிடைத்தது. அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியால் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டதோடு, நாற்பது துணை நிறுவனங்கள் கொண்ட அமைப்பாகவும் மாறியது. இந்த நாற்பது நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார் சிவ நாடார்.

2004-ல் ஐந்து நிறுவனங்களாக இருந்த நிறுவனத்தை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் என இரு பெரும் நிறுவனங்களாக மாற்றினார். இன்றைக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இதன் வருமானம் 2011 கணக்குபடி, ரூ.14,111 கோடி. இது 2010-ம் ஆண்டைவிட ரூ.3,128 கோடி அதிகம்.

வெறும் பிஸினஸ் என்பதோடு நின்றுவிடாமல் கல்வி வளர்ச்சியிலும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறார் சிவ நாடார். 1981-ல் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் தொடங்க காரணமாக இருந்தார். இவரது தந்தையாரின் பெயரில் சென்னையில் ஸ்ரீ சுப்பிரமணிய நாடார் இன்ஜினியரிங் கல்லூரியை 1996-ல் தொடங்கியதோடு, தனது நிறுவனத்தின் பல லட்சம் பங்கு களை நன்கொடையாகவும் தந்திருக்கிறார். உ.பி.யில் இவர் தொடங்கி நடத்தும் சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் இன்றைக்கு எட்டாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதற்காக இவர் தந்திருக்கும் பணம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். சிவ நாடாரின் மகள் ரோஷிணியும் தன் தந்தையைப் போலவே கல்வி வளர்ச்சியில் ஆர்வத்தோடு இருக்கிறார்.

திருச்செந்தூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்று இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருக்கும் சிவ நாடாரை நினைத்து, நாடார் சமூகத்தினர் மட்டுமல்ல, தமிழகமே பெருமைப்படலாம்.

(அறிவோம்)Source link

Leave a Reply

Your email address will not be published.