பொதுவாக, பெரும்பாலானவர்களின் வீட்டில் பெண்கள் தான் சமைக்கின்றனர். பெரும்பாலான ஆண்களுக்கு பெரிய அளவில் சமைக்கத் தெரியாது என்றாலும், வீட்டில் சமைக்கும் பெண்களை ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். சாப்பாட்டில் உப்பு இல்லை, காரம் இல்லை, புளிப்பு இல்லை என்று ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது சிலரது வாடிக்கையாக இருக்கும். அதிலும், சிலர் எனக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து தரவில்லை என்று மனைவி மீது கோபித்துக் கொள்வது உண்டு. இதெல்லாம் பொதுவாக இயல்பான விஷயங்கள் தான் என்றாலும், சில சமயம் இந்த குறைகளை ஆண்கள் எப்படி கையாளுகின்றனர் என்பதை பொருத்து அது பூதாகர பிரச்சினையாக மாறி விடுகிறது.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்ற நபர் ஒரு மட்டன் பிரியர். தன் மனைவியிடம் மட்டன் சமைத்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், தன் ஆசையை நிறைவேற்றும் வகையில் மனைவி மட்டன் சமைக்கவில்லை எனத் தெரிந்ததும் அவருக்கு கோபம் வந்து விட்டது.
100 ஃபோன் செய்து சிக்கலில் மாட்டிய கில்லாடி
கோபத்தில் இருந்த பிரவீன் திடீரென்று ஃபோனை எடுத்து காவல் துறை கட்டுப்பாட்டு மைய எண் 100 -க்கு கால் செய்தார். காவலர்களிடம் தன் மனைவி மட்டன் சமைக்கவில்லை என்று அவர் புகார் செய்தார். எதிர் முனையில் பேசிய காவலர்களுக்கு தொடக்கத்தில் எதுவும் புரியவில்லை. யாரோ சிலர் ஃபிராங்க் செய்வதாக நினைத்துக் கொண்டனர். ஆனால், பிரச்சினை இத்தோடு நிற்கவில்லை.
மனம் ஆறுதல் அடையாத பிரவீன், மீண்டும், மீண்டும் காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு இதே புகாரை கூறிக் கொண்டிருந்தார். அதாவது, மொத்தம் 6 முறை இதுபோல ஃபோன் செய்து புகார் வாசித்தார் அவர்.
Also Read : ஒரே பெண்ணுக்கு 21 குழந்தைகள்.. ஆனால் எல்லாமே 2 வயதுக்கு கீழே தான்.!
அலேக்காக தூக்கி வந்த போலீஸார்
எவ்வளவோ சொல்லியும், அடுத்தடுத்து அதேபோல பிரவீன் புகார் செய்து கொண்டிருந்த நிலையில், காவல் துறையினர் பொறுமையை இழந்தனர். இதையடுத்து ரோந்து வாகனத்தில், காவல் துறையினர் பிரவீன் வீட்டுக்கு சென்ற போது, அவர் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அடுத்த நாள் காலையில் அவரை கைது செய்தனர். பிரவீன் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, பொது இடத்தில் தவறாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.