Tamil Entrepreneurs

Viral Video | திருமண அரங்கிற்கு தேவதை போல பறந்து வந்த மணப்பெண் – இது நம்ம லிஸ்டுலயே இல்லயே!


இந்திய திருமணங்களில் மணமகன் அழைப்பு அல்லது மணமகள் அழைப்பு என்பது எப்படி நடைபெறும் என்பதை பல திருமணங்களில் நாம் கண்கூடாக பார்த்திருப்போம். ஏன், நமது திருமணத்திலும் கூட அத்தகைய சிறப்புமிக்க வரவேற்பு நமக்கு நடந்திருக்கும்.

பழங்காலத்தில் மணமகன் அல்லது மணமகள் அழைப்பு என்றாலே, அது அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் தான் நடைபெறும். கால சூழலுக்கு ஏற்ப இப்போதெல்லாம் ரதம் போல அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மணமக்கள் ஊர்வலம் நடைபெறுகிறது. அதே சமயம், கொஞ்சம் விமர்சையாக திருமண நிகழ்வை நடத்துபவர்கள் குதிரை வண்டியில் அல்லது நேரடியாக குதிரையில் மணமகனை அழைத்து வருகின்றனர்.

எதுவுமே இல்லை என்றாலும், மணமக்களை காரில் அழைத்து வருவதும் நடக்கிறது. இப்படி மணமக்கள் வரவேற்பு குறித்த பட்டியலில் இல்லாத நிகழ்வு ஒன்று இப்போது நடந்திருக்கிறது. சற்றே வித்தியாசமாக யோசித்து, மணமகள் அழைப்பை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கின்றனர். ஆனால், இந்த சம்பவம் நடைபெற்றுள்ள இடம் இந்தியா அல்ல, இத்தாலி.

தேவதை போல வந்திறங்கிய மணமகள்

திருமண நாளை சிறப்புமிக்கதாக நடத்தி, வாழ்வில் என்றென்றும் நினைவுகூரத் தக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லோர் மனதிலும் விருப்பம் இருக்கும். “உனக்குன்னு ஒரு தேவதை வருவாள் பாரு’’ என்று பெரியவர்கள் சொல்வதற்கு ஏற்பவே திருமண அரங்கிற்கு வந்து சேர்ந்தார் மணப்பெண்.

திருமண விருந்தினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எந்த வழியாக மணப்பெண் வருவார் என்பதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்க, அந்த சமயத்தில் வானத்தில் இருந்து வந்திறங்கினார் மணப்பெண். ஆம், சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 250 ஹீலியம் பலூன்களை கட்டி, அதனுடன் இணைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து, பறந்து வந்துதான் இறங்கினார் அவர்.

திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் சார்பில், இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது. சுமார் 4 மில்லியன் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. பலரும் இதுகுறித்து ஆச்சரியமான கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “இது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு எந்த அளவுக்கு திட்டமிடுதல் தேவைப்பட்டிருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உண்மையாகவே நீங்கள் கலக்கியிருக்கிறீர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய திருமண நிகழ்வையும் இதேபோல பிரம்மாண்டமாக நடத்த விரும்புவதாக சமூக வலைதள பயனாளர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர், “எனக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது. மீண்டும் இதுபோல வானில் இருந்து பறந்து வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், நானே வந்து இறங்கியதைப் போல நினைத்துப் பார்க்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.